திங்கள், 16 ஜூலை, 2012

சிறுநீரகக்கல்,


மிகப் பழமையான நோய்களில் ஒன்று சிறுநீரகக்கல், 

கி.மு. 600 லேயே இந்நோய் கண்டறியப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

பெயர்க் காரணம்- 

போக்குவரத்து வாகனம் சாலை வசதி இல்லாத காலத்தில்

தூரப் பயணம் மேற்கொள்பவர்கள்.

பை நிறைய கற்களை கொண்டு சென்று 


குறிப்பிட்ட தூரத்திற்கு ஒன்றாக போட்டுக் கொண்டே செல்வார்கள். 

திரும்பி வரும்போது கற்களை எடுத்துக் கொண்டு வருவார்கள். 

எத்தனை கல் செலவானது என்பதை பொறுத்து

பயண தூரத்தை கணக்கிட்டுக் கொள்வார்கள். 

இம்முறைக்கு Calculus என்று பெயர். 

சிறுநீரககல்லுக்கும் Calculus என்று பெயர் வைத்து விட்டார்கள்.

சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை 

யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். 

பொதுவாக 30-60 வயதினருக்கு அதிக வாய்ப்பு. 

அதிலும் கீழ்கண்டவர்களுக்கு இன்னும் அதிக வாய்ப்பு-

வெப்பம் அதிகமாக உள்ள இடத்தில் வசிப்பவர்களுக்கு, 

வெப்பமான சூழ்நிலையில் வேலை பார்ப்பவர்களுக்கு ,

[உதாரணம் இரயில் எஞ்சின் ஓட்டுநர்கள்]

சில சுற்று வட்டாரங்களில் கடினத்தன்மை அதிகம் உள்ள 

தண்ணீரை குடிக்க வேண்டி இருப்பவர்களுக்கு (STONE BELT AREAS). 

[உதாரணமாக இராமநாதபுரம் மாவட்டம்]
.
குடும்பத்தில் யாருக்கேனும் சிறுநீரகக்கல் வந்திருந்தால்.

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள்,

தண்ணீர் மிகவும் குறைவாகக் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள்.

சிறுநீர்ப்பாதையில் அடைப்பு உள்ளவர்கள்,

மிகச் சிலருக்கு கற்களை உருவாக்கும் இரசாயனங்களான 

கால்சியம், யூரிக்ஆசிட் இரத்தத்தில் அதிகமாக இருந்தால்.

இந்தியாவில் 80 லட்சம் மக்கள் வரை, 

இந்த உபாதையால் பாதிக்கப்படுகின்றனர்.

பெரும்பாலான கற்கள் 

கால்சியம்(சுண்ணாம்புச் சத்து) கொண்டவை(70-90% வரை). 

அதனோடு சேர்ந்து வேறு பல இரசாயனங்களும் 

வெவ்வேறு விதமான கலவைகளாக இருக்கலாம்.

1. கால்சியம் + ஆக்சலேட்

2. கால்சியம் + பாஸ்பேட்

3. கால்சியம் + மெக்னீசியம் + அம்மோனியம் + பாஸ்பேட்

4. கால்சியம் + யூரிக் ஆசிட் + ஆக்சலேட் 

5. யூரிக் ஆசிட்

6. அபூர்வமாக சிஸ்டின், சிலிகான் ஆகியன.

சிறுநீரகக் கற்களின் அறிகுறிகள

பெரும்பாலானவர்களுக்கு முதுகு அல்லது வயிற்றில் ஏற்படும் 

 கடுமையான வலியே முதல் அறிகுறியாக இருக்கும். 

இது சில சமயம் அடிவயிறு, தொடை 

ஆண், பெண் ஜனன உறுப்புகள் வரை பரவலாம். 

கற்கள் சிறுநீரக குழாய்களில் நகரும் போதே 

வலி அதிகமாக இருக்கும். 

சிலருக்கு வாந்தி, மயக்கம் உண்டாகலாம்.

 இன்னும் சிலருக்கு சிறுநீர் கழிக்கையில் வலி, எரிச்சல், 

இரத்தம் கலந்து போதல் போன்ற தொந்திரவுகள் உண்டாகலாம். 

சில சமயம் சிறுநிரகக் கற்கள் சிறுநீர் வரும் பாதையை 

முழுதாக அடைத்து விட்டால் சிறுநீர் கொஞ்சம் கூட வெளி வராமல் 

சிறுநீரகச் செயலிழப்பு (கிட்னி ஃபெயில்யர்) உண்டாகலாம். 

சிலருக்கு சிறுநீர் அடைப்பினால் கிருமித்தொற்று ஏற்பட்டு 

அதனால் காய்ச்சல் உண்டாகலாம்.

அடிக்கடி சுரம் வருதல் .

இவர்கள் ஒரு சிறுநீரக மருத்துவர் அல்லது 

சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணரை அணுக வேண்டும்.

இவர்களுக்கு உடல் பரிசோதனை

பிறகு  சில அத்தியாவசிய பரிசோதனைகள் 

செய்ய வேண்டி இருக்கும். அவை

1. வயிற்றுப் பகுதிக்கான அல்ட்ரா சவுண்ட் ஸ்கான் பரிசோதனை

2. வயிற்றுப் பகுதிக்கான எக்ஸ்-ரே படம்.

3. சிறுநீர்ப் பரிசோதனை.

4. இரத்தத்தில் க்ரியேட்டினின், கால்சியம், யூரிக் ஆசிட்

 ஆகியவற்றின் அளவுகள்.

இந்த பரிசோதனை முடிவுகளைப் பொறுத்து சிலருக்கு

வேறு சில சிறப்பு பரிசோதனைகள் செய்ய வேண்டி வரலாம். 

அவை

1. இரத்தத்தினுள் ஒரு சிறப்பு மருந்து கொடுத்து 

அது சிறுநீரகம் வழியாக வெளியேறும் போது 

எக்ஸ்-ரே படம் எடுத்துப் பார்க்கும் I.V.U எனப்படும் சிறப்பு எக்ஸ்-ரே.

2. 24 மணி நேர சிறுநீரைப் பிடித்து 

அதில் செய்யப்படும் சில பரிசோதனைகள் ஆகியன.

அளவில் சிறியதான கற்கள் சிறுநீர் மூலமாகவே வெளியேறிவிடும்.

சிறுநீர் குழாயில் கீழ்ப்பகுதியில் காணப்படும்

 4 மி.மீ. அளவை விட சிறிய கற்களில் 

90 சதவீதம் தானாக வெளியேறி விடுகின்றன. 

அளவு 6 மி.மீ.க்கு மேல் இருந்தால் 

20 சதவீதம் மட்டுமே தானாக வெளியேறும். 

நோயாளிகள் தாராளமாக தண்ணீர் குடிப்பதன் மூலம் 

சிறுநீர் வெளியேறி, அதன் மூலம் கற்களும் வெளியேறி விடும்

1 செ.மிக்கு குறைவான அளவு உள்ள கல்லாக இருந்தால் 

 முதலில் வலி நிவாரணிகள் கொடுக்கப்படும்.

 3-4 லிட்டர் தண்ணீர் குடித்து சிறுநீர் நன்கு போகச் செய்யப்படும். 

சில சமயம் ட்ரிப் மூலம் க்ளுகோஸ் எனப்படும் 

மருந்து திரவங்களை செலுத்தியும் 

சிறுநீரின் அளவை அதிகரித்து சிறுநீரகக் கல்லை 

சிறுநீரின் அழுத்தத்தால் வெளியே தள்ளிக் கொண்டு வர


 முயற்சி செய்யப்படும். 

சிறுநீரகக் கல்  7 மி.மி.க்கு குறைவான அளவும், 

வளவளப்பாகவும் இருந்தால் 

அது தானாகவே வெளியே வந்து விடும். 



7-9 மி.மி அளவு இருந்தால் வெளியே வரவும் 



சிக்கிக் கொள்ளவும் சம பாதி வாய்ப்புக்கள் உண்டு. 



9 மி.மி க்கு மேல் இருந்தால் 



வெளியே வரும் வாய்ப்பு மிகவும் குறைவு.



 கல்லில் முட்களாக இருந்தாலும் 


சிக்கிக் கொள்ள வாய்ப்புகள் அதிகம்.


பெரிய கற்கள் சிறுநீர்ப்பாதையில் அடைப்பு ஏற்படுத்தும் போது 

அறுவை சிகிச்சை தேவைப்படும். 

தொற்று ஏற்பட்டு சிறுநீரகம் பெருமளவு பாதிக்கப்பட்டிருந்தால்

 சிறுநீரக நீக்கம் தேவைப்படும். 

பகுதியளவு பாதிக்கப்பட்டிருந்தால் பகுதி நீக்கம் செய்ய வேண்டும்.

சிறுநீர்ப்பாதையில் அடைப்பு இல்லாதவர்களுக்கு

 லேப்ராஸ்கோபி முறையில் கற்கள் மட்டும் பொடியாக்கப்பட்டு

 சிறுநீரில் வெளியேற்றப்படும். 

இந்த கற்களை பரிசோதித்து 

தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.







சிறுநீரில் கற்கள் உருவாகாமல் இருக்க

அதிகமான பழங்கள் , அதிகமான காய்கறிகள் அன்றாடம் உட்கொள்வது.

 அதிகமான பருப்பு மற்றும் விதை (Nuts & Legumes) வகைகள் உட்கொள்வது.

 குறைந்த கொழுப்பு சத்துள்ள பால் பொருட்கள் உட்கொள்வது. 

முழுமையான தானிய வகைகள்  சேர்த்தல்

(மேல் தோல் நீக்கப்படாத தானிய வகைகள்) 

 குறைந்த அளவிலான உப்பு சேர்த்தல். 

குறைந்த அளவிலான இனிப்பு வகைகள் உட்கொள்ளுதல். 

குறைந்த அளவிலான இறைச்சி மற்றும் 

பதப்படுத்தப்பட்ட இறைச்சி உட்கொள்ளுதல் 

 தினமும் 2 அல்லது 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். 

பகலில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை

 இரண்டு டம்ளர் வீதம் தண்ணீர் குடிக்க வேண்டும். 

இரவு படுக்க செல்லும் முன்னரும்

 தூக்கத்தில் எழுந்தும் அரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.


குறைத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்

காலிபிளவர், முட்டைக்கோஸ், தக்காளி, கத்தரிக்காய், 

பசலைக்கீரை, வெள்ளரி, முருங்கைக்காய்,  உருளைக்கிழங்கு,

 பீட்ரூட், கருணைக்கிழங்கு, சிவப்பு முள்ளங்கி, மரவள்ளிக்கிழங்கு, 

திராட்சை, கொய்யா, நெல்லி, பலா, நாவற்பழம், சீதாப்பழம், 

மாதுளை, மாம்பழம். சமையல் சோடா, சோடியம் பை&கார்பனேட் உப்பு,

 சீஸ், சாஸ், க்யூப்ஸ் தவிர்க்க வேண்டும். 

உப்பு பிஸ்கட், சிப்ஸ், கடலை, பாப்கான், 

அப்பளம், வடகம், வற்றல், ஊறுகாய், 

கருவாடு, உப்புக்கண்டம், 

முந்திரிபருப்பு, பாதாம், பிஸ்தா, கேசரி பருப்பு, 

கொள்ளு, துவரம் பருப்பு, 

ஸ்ட்ராங் காபி, டீ, கோக்கோ, சாக்லேட், குளிர்பானங்கள்,

 மது மற்றும் புகையிலை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். 







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக